ADDED : ஜூலை 24, 2026 07:22 PM
புதுச்சேரி: விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக, புதுச்சேரி மாநில அத்லெடிக்ஸ் சங்கம், புதுச்சேரி மாநில ஹாக்கி சங்க பிரதிநிதிகள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களுக்கு, உயர் கல்வி பயில இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு தொடர்பான விளையாட்டு பட்டியலில் இருந்த 65 விளையாட்டுகளில், 30 விளையாட்டுகள் நீக்கப்பட்டு அரசானை வெளியிடப்பட்டது.
இதற்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி மாநில அத்லெடிக்ஸ் சங்கம், புதுச்சேரி மாநில ஹாக்கி சங்க பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்களுடன் சென்று, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில் ‘மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னுரிமை மற்றும் அதிக முன்னுரிமை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை, புதுச்சேரி மாநிலத்தில் தகுதி உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை உறுதி செய்துள்ளது.
உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், 2002 ஆண்டுக்குப் பிறகு, அதிக பிரபலம் இல்லாத பிற விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ,தகுதியுடைய விளையாட்டு வீரர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையை தற்போது வெளியிடப்பட்ட அரசாணை மாற்றி அமைக்கும். இதற்காக, முயற்சியை எடுத்த கவர்னருக்கும், அரசுக்கும் நன்றி’ என்றனர்.
