சட்டவிரோதமாக இந்திய ஆவணங்கள் பெற்ற இலங்கை தமிழர் கைது
சட்டவிரோதமாக இந்திய ஆவணங்கள் பெற்ற இலங்கை தமிழர் கைது
ADDED : ஜூலை 08, 2026 05:51 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக, இந்திய ஆவணங்களை பெற்று பயன்படுத்தி வந்த இலங்கை தமிழரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் புகழேந்திரன், 39; இவர், கடந்த 2013ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பேக் கடையில் வேலை செய்தபோது எம்.ஆர்.என்., நகரைச் சேர்ந்த சாமிராபானு என்பரை காதலித்து, 2017ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், புகழேந்திரன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை முகமது சபீர் என்று மாற்றி கொண்டார். தொடர்ந்து தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, இந்திய ஆவணங்களான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேன் கார்டு ஆகியவற்றை சட்ட விரோதமாக பெற்று கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார்.
சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், புகழேந்திரன் என்ற பெயரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளையும் பெற்று வந்துள்ளார். தற்போது சின்னசேலத்தில் புகழேந்திரன்(எ) முகமது சபீர் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக உளவுத்துறை போலீசார் மூலம் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் புகழேந்திரன் (எ) முகமது சபீரை பிடித்து விசாரித்தனர். இலங்கை தமிழர் என்பதை மறைத்து இந்திய ஆவணங்களை சட்ட விரோதமாக பெற்று பயன்படுத்தி வந்தது தொடர்பாக வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த புகழந்திரன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேன் கார்டு உள்ளிட்ட இந்திய ஆவணங்களை பெற்றது தொடர்பாகவும், இதுபோல் வேறு இலங்கை தமிழர்கள் யாரேனும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகள் வாங்கியுள்ளனரா என அரசு அலுவலங்களில் உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
