/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாங்காத கடனுக்கு வங்கியில் பணம் பிடித்தம்; பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவு

ADDED : மார் 03, 2025 06:23 AM
புதுச்சேரி : வாங்காத கடனுக்கு வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, வங்கிக்கு, மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டது.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர், வீட்டு உபயோகப் பொருட்களை தனியார் ஏஜென்சி மூலம் தவணையில் வாங்க, ராஜேஷ் என்ற முகவர் மூலம் 2019ல் தனியார் வங்கியில் கடன் பெற விண்ணப்பித்தார்.
அவருக்கு கடன் தொகையோ, வீட்டு உபயோக பொருளோ கிடைக்கவில்லை. மாறாக, அவர், 58,000 ரூபாய் கடன் பெற்றதாக, அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 6,428 ரூபாய் மாதாந்திர தவணை தொகையாக தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டது. மேலும், வங்கி கணக்கில் போதிய நிதி இல்லாததால், ரூ.67,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த கஜலட்சுமி விசாரித்தபோது, ராஜேஷ் மூலம் அறிமுகமான சாரதி என்பவர், கஜலட்சுமியின் ஆவணங்களை பயன்படுத்தி போலியாக கையெழுத்திட்டு, கடன் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து, கஜலட்சுமி பெரியகடை போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, அதே ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு கடன் கணக்குகளுக்கு ரூ.18,116 மற்றும் ரூ.28,200 திருப்பி செலுத்தக் கோரி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது.
கஜலட்சுமி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைவு தீர்வு ஆணையத்தில் முறையிட்டார். மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு குற்றவியல் விசாரணை தேவை என்று கூறி, புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல் முறையீட்டு மனுவை, புதுச்சேரி மாநில நுகர்வோர் ஆணைய தலைமை உறுப்பினர் சுந்தரவடிவேலு, உறுப்பினர் உமாசங்கரி ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி, தீர்ப்பு கூறியது.
அதில், தனியார் வங்கி கஜலட்சுமிக்கு கடன் வழங்கியதாக நிரூபிக்கவில்லை. மேலும் கஜலட்சுமிக்கு வங்கிக்கடன் ஒப்பந்தங்களை வழங்கவும் தவறியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது.
எனவே, ரூ.58,000 கடன் தொகையை திரும்ப பெறவும், பிடித்தம் செய்யப்பட்ட அனைத்து மாத தவணை தொகைகளை திருப்பித் தரவும், கடன் தொகை இல்லை என்ற சான்றிதழை வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், நுகர்வோர் அனுபவித்த மன வேதனை மற்றும் நிதி நெருக்கடிக்கு இழப்பீடாக 1 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுகளை நிறைவேற்ற வங்கிக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.