/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில வருவாய் ரூ.7,641 கோடியாக அதிகரிப்பு: பட்ஜெட் உரையில் முதல்வர் தகவல்
/
மாநில வருவாய் ரூ.7,641 கோடியாக அதிகரிப்பு: பட்ஜெட் உரையில் முதல்வர் தகவல்
மாநில வருவாய் ரூ.7,641 கோடியாக அதிகரிப்பு: பட்ஜெட் உரையில் முதல்வர் தகவல்
மாநில வருவாய் ரூ.7,641 கோடியாக அதிகரிப்பு: பட்ஜெட் உரையில் முதல்வர் தகவல்
ADDED : மார் 13, 2025 06:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சொந்த வருவாய் அதிகரித்ததுடன், மூலதன செலவீனம் 9.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் ரூ.13,600 கோடிக்கு நேற்று முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலுக்கு தயராகும் வகையில் பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்களையும், சலுகைகளும் அறிவித்த முதல்வர் ரங்கசாமி, மாநிலத்தின் வருவாய் ரூ.7,641 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதி பற்றாக்குறையும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாக இருப்பதாக அவர் அறிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலை குறித்த முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரை:
அரசின் 2025-26ம் நிதியாண்டின் பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு ரூ.13,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடியாகும்.
மாநில பேரிடர் நிவாரண நிதியை சேர்ந்து மத்திய அரசின் நிதிஉதவி ரூ.3,432.18 கோடியாகும். மத்திய சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.400 கோடியாக இருக்கும்.
மேலும் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் பொருட்டு பேரம் பேசி வாங்கும் கடனையும் சேர்த்து ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பட்ஜெட் திட்ட மதிப்பீடான ரூ.13,600 கோடியில், ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினங்களுக்காவும், ரூ.1,975.28 கோடி மூலதன செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்த செலவீனங்களில் 1.66 சதவீதமாக இருந்த மூலதன செலவீனம், 2025-26 நிதியாண்டில் 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அரசின் முக்கிய கடமை. இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தின் வாயிலாக அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாநில மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சி மேம்பட வழிவகுக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனி நபர் வருமானம் உயர்வு நமது மாநிலத்தின் முன்னேற்றம் அடைவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு முக்கியம்.
எனவே அரசின் பல்வேறு மூலதன பணிகள், சொத்துகள், அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துகள் உருவாக்கும் பொருட்டு, அளிக்கும் கொடை ஆகியவற்றிற்காக கடந்த ஆண்டைவிட பட்ஜெட்டில் கூடுதலாக 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதேவேளையில் மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் நிலுவையில் உள்ள மொத்த கடன் விகிதம் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளேயே உள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த விரைவான பொருளாதார வளர்ச்சி அடையவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றார்.