/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் சிறப்பு பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து
/
மாணவர் சிறப்பு பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து
மாணவர் சிறப்பு பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து
மாணவர் சிறப்பு பஸ் டிரைவர் நெஞ்சுவலியால் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து
ADDED : ஜூன் 20, 2024 03:50 AM

பாகூர்,: கல்வித்துறை சார்பில் இயக்கப்படும் மாணவியர் சிறப்பு பஸ்சை இயக்கிய டிரைவர் நெஞ்சு வலியால் இறந்ததால், பஸ் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்புக்கடையில் மோதி விபத்துக்குள்ளானது.
புதுச்சேரி அரசின் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே இலவச சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை 4.30 மணியளவில் கனகசெட்டிக்குளத்தில் இருந்து 2 ஜி என்ற மாணவிகள் சிறப்பு பஸ் புறப்பட்டு, பாகூர் அடுத்துள்ள மூ.புதுக்குப்பம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ்சை வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியை சேர்ந்த பெரியசாமி, 58; ஓட்டிச் சென்றார். புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே பஸ் சென்றபோது, டிரைவர் பெரியசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
வலியால் துடித்த அவர் பஸ்சின் வேகத்தை குறைத்து, கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் இருகையிலேயே மயங்கி விழுந்த நிலையில், மெதுவாக சென்ற பஸ் சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையிலும், மின் விளக்கு கம்பத்திலும் மோதி நின்றது.
இதனால் பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர், மாணவிகளும், பொது மக்களும் டிரைவர் பெரியசாமியை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டிரைவர் பெரியசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், பஸ்சில் பயணம் செய்த மாணவிகளுக்கு ஆபத்து நேராத வகையில், அவர் பஸ்சின் வேகத்தை குறைத்து கட்டுப்படுத்தியதால் பெரியளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.