திருவிழாவில் பட்டாசு வெடித்து கோவில் பந்தல் எரிந்ததால் பரபரப்பு
திருவிழாவில் பட்டாசு வெடித்து கோவில் பந்தல் எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 06, 2026 07:32 PM

புதுச்சேரி: சோலை நகர், செங்கேணி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து, விழா பந்தல் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை, சோலைநகரில் செங்கேணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி தினமும் காலை அம்மனுக்கு அபிேஷகமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த சுவாமி வீதியுலாவின் போது, வானவெடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அப்போது, இரவு 11 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பட்டாசிலிருந்து வெளிவந்த தீப்பொறி, கோவில் வளாகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பட்டு திடீரென தீ பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமள என பரவி பந்தல் முழுதும் எரிய துவங்கியது.
தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், திருவிழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீ விபத்து குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
