ADDED : செப் 13, 2024 06:26 AM
புதுச்சேரி: அறுவை சிகிச்சையின்போது இறந்த ஹேமச்சந்திரன் மரணத்திற்கு, நியாயம் கிடைக்க செய்த தமிழக அரசுக்கு இ.கம்யூ., நன்றி தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஏப்., 23ம் தேதி இறந்தார்.
அவரது மரணத்தில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென தமிழக அரசிற்கு செல்வநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தீர்த்தலிங்கம் தலைமையிலான விசாரணை குழு அமைத்து, தனியார் மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து, சீல் வைத்தது.
பின், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து கடந்த மே மாதம் அரசு ஆணையை ரத்து செய்தது.
ஐகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு நேற்று தமிழக அரசு ஆணைக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்தது. மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்யும், சீல் வைக்கும் தமிழக அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
ஹேமச்சந்திரன் இறப்பிற்கு, நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியனுக்கு நன்றி.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.