/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற சமையல் உதவியாளரை தனது காரில் வழி அனுப்பிய இயக்குனர்
/
ஓய்வு பெற்ற சமையல் உதவியாளரை தனது காரில் வழி அனுப்பிய இயக்குனர்
ஓய்வு பெற்ற சமையல் உதவியாளரை தனது காரில் வழி அனுப்பிய இயக்குனர்
ஓய்வு பெற்ற சமையல் உதவியாளரை தனது காரில் வழி அனுப்பிய இயக்குனர்
ADDED : ஆக 01, 2024 06:32 AM

புதுச்சேரி: ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதியில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமையல் உதவியாளருக்கு பாராட்டு விழா நடத்தி, துறை இயக்குனர் தனது காரிலேயே அவரை வீட்டிற்கு வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கடந்த, 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த சமையல் உதவியாளர் கஸ்துாரி பாய், பணி நிறைவு பெற்றார்.
இந்நிலையில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, கிருஷ்ணா நகர் அரசு மாணவியர் விடுதி வளாகத்தில் நடந்தது.
விடுதி காப்பாளர் கவிதா தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டார். அவர், கஸ்துாரி பாயின், 25 ஆண்டுகால சேவையினை பாராட்டி சால்வை அணிவித்தும், பரிசுகள் வழங்கி, வாழ்த்தினார்.
அவர் விழாவில் பேசுகையில், 'ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களுக்கும் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்த வசதியும் இல்லாத காலத்தில், விறகு அடுப்பில் சமையல் செய்து, அவர், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது' என்றார்.
விழாவின் முடிவில் கஸ்துாரிபாய் மற்றும் அவரது குடும்பத்தினரை யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் இளங்கோவன் தனது காரிலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில் துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.