/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியது
/
தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியது
ADDED : மார் 25, 2024 05:04 AM
பிரதான கட்சிகள் இன்று முதல் மனுதாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்க உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் லோக்சபா தேர்தல், மார்ச் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளராக நமச்சிவாயமும், இண்டியா கூட்டணியில் காங்., வேட்பாளராக சிட்டிங் எம்.பி. வைத்திலிங்கம் போட்டியிடுகின்றனர். இதுதவிர, அ.தி.மு.க., வில் தமிழ்வேந்தனும், நாம் தமிழர் கட்சியில் மேனகா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் துவங்கி, 3 நாட்கள் முடிந்த நிலையில், இந்த பிரதான கட்சி வேட்பாளர்கள் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனு துவக்கிய இரண்டாவது நாள் சுயேச்சை வேட்பாளர் கூத்தன் (எ) தெய்வநீதி, 54; என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நேற்றும் நேற்று முன்தினமும் விடுமுறை. இன்று துவங்கி நாளை மறுநாள் 27ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 28ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை வரும் 30ம் தேதிக்குள் திரும்ப பெற காலகெடு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சியான பா.ஜ., இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இண்டியா கூட்டணி காங்., வேட்பாளர் முகூர்த்த நாளான 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக காங்., கட்சியினர் தெரிவித்தனர்.
இதுதவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். பிரதான கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

