/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்
/
விஷ வாயு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்
ADDED : ஜூன் 14, 2024 06:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷ வாயு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மேலும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி, சமூக நலக்கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், புது நகரில் கடந்த 11ம் தேதி காலை கழிவுநீர் இணைப்பில், ஏற்பட்ட விஷ வாயு கசிவால் ஒரு மாணவி உள்பட 3 பெண்கள் இறந்தனர்.
மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, பொதுப்பணி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தடயவியல், தீயணைப்பு, போலீஸ், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த குழுக்கள், ஆய்வு மற்றும் மீட்பு பணிகளில் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
இதனிடையே விஷ வாயு தாக்கி உயிரிழந்த, 3 பேரின் குடும்பத்திற்கு மொத்தம், ரூ. 70 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆனாலும், விஷ வாயு பாதிப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் குற்றச்சாட்டு
வீடுகளில் வசிக்கும் மக்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாத நிலையில் இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக, கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
6 பேர் மருத்துவனையில் அனுமதி
இந்நிலையில், புதுநகர் 3வது தெருவை சேர்ந்த புஷ்பராணி, 38, என்பவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். அதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த, 5 பேர் திடீரென மயக்கமடைந்ததால், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள்விஷ வாயு கசிவால், பாதிக்கப்பட்டனரா அல்லது வேறு காரணமா என, பரிசோதனை நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில், புதுநகரில் உள்ள வீடுகளில், கழிவு நீர் குழாய்கள் சரி செய்யும் பணி நேற்று நடைபெற இருந்தது.
இப்பணிகள் நடக்காததால், அப்பகுதி பெண்கள், குழந்தைகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
இந்நிலையில் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணக் கோரி பொதுமக்கள், தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் தீவிரம்
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள், மாலைக்குள் அனைத்து வீடுகளிலும் உள்ள, கழிவுநீர் குழாய்கள் சரி செய்யப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து சீரமைக்கும் பணிகள் துவங்கியது. முதற்கட்டமாக, 3வது மற்றும் 4வது தெருக்கள் மற்றும் கனகன் ஏரி அருகே விஷ வாயு செல்வதற்கு வசதியாக 'பைப்' அமைக்கும் பணி நடந்தது.
அப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் செல்ல வசதியாக, 'எஸ்' மற்றும் 'எச்' வடிவில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதா என கண்டறியும் பணியும் நடந்தது. இப்பணிகள், இளநிலை பொறியாளர் பாலாஜி தலைமையில் நடந்தது.
மேலும் அப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், விஷ வாயு வெளியே செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியும் நடக்க உள்ளது.
அவரச உதவிக்கு மருத்துவர்கள் முகாமிட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமுதாய நலக்கூடத்தில் தஞ்சம்
விஷ வாயு தாக்கி இறந்து விடுவோமோ என்ற அச்சத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சமுதாய நலக்கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடையே 3,4,5 வது தெருவில் வசிக்கும் மக்களை சமுதாய நலக்கூடத்தில், தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 பேர் உடல்நிலை கண்காணிப்பு
தற்போது கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 6 பேரின் உடல்நிலையை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும், ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.