/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது
/
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது
ADDED : ஏப் 16, 2024 06:53 AM
புதுச்சேரி : பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது;
இந்த தேர்தலில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு, நமது உரிமைகள் காக்கும் வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலை நாட்ட இத்தேர்தல் மிக முக்கியமானது.இந்திய மக்கள் இதை உணரத்துவங்கி விட்டனர்.
வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகிறது. அரசியல் அமைப்பை மதிக்காதவர்களை இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கின்றனர். தங்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைத்து, தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து, பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதை அமித்ஷா செயல்படுத்துகிறார்.
நிதித்துறையின் கீழ் அமலாக்கத்துறை இருந்தது. தற்போது உள்துறை அமலாக்கத்துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
தங்களுக்கு எதிராக உள்ளோரை பயமுறுத்த இந்த அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் மாநிலந்தோறும் சென்று, ஜனநாயகம், அரசியமைப்பு, அடிப்படை உரிமைகள் காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசைப் பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக்கூடாது.
பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பணம் மீட்பு உள்ளிட்டவை அதற்கு உதாரணம். இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை. பிரசாரத்திற்கு வரும் மோடி தொடர்ந்து காங்., கட்சியையும், ஆட்சியில் இல்லாத காந்தி குடும்பத்தையும் விமர்சிக்கிறார். அது காங்., மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது.
காங்., கட்சியை அழிக்க முயற்சிக்கிறார். அதனால் வருமான வரி தாக்கல் விவகாரத்தை கையில் எடுத்தனர். ரூ. 14 லட்சம் கணக்கு தாக்கல் சரியாக இல்லை என கூறி வழக்கு தொடர்ந்து, ரூ. 125 கோடி அளவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இதற்கு உதாரணம்.
தமிழகம், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி தி.மு.க., தலைமையில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். கருத்து கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறது. நாங்கள் மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையில் இடங்களை இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஒன்றுக் கொன்று வித்தியாசமானது. புதுச்சேரி பிரசார பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

