/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான சேவை துவங்குவது அக்., மாதம் தள்ளிப்போகிறது
/
விமான சேவை துவங்குவது அக்., மாதம் தள்ளிப்போகிறது
ADDED : மே 29, 2024 05:26 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் துவங்கும் பணி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி போகிறது.
புதுச்சேரியில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் 90 பேர் பயணிக்க கூடிய ஒரே விமானம் தினசரி ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்து, இங்கிருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து புதுச்சேரி வந்து, மீண்டும் ஹைதராபாத் செல்கிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் தனது விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்தி விட்டு, வெளியேறியது.
அதைதொடர்ந்து புதுச்சேரியில் மீண்டும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்து, வரும் ஜூலை மாதம் முதல் சேவை துவங்குவதாக அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி விமான அதிகாரிகள் இடையே காணொலி மூலம் நடத்திய கூட்டத்தில், புதுச்சேரி விமான சேவையை அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கி கொள்வதாகவும், புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் இரண்டு அலுவலக அறை மற்றும் விமான பராமரிப்பதற்கான பணிமணைக்கான இடம் ஆகியவை வேண்டும் என, இண்டிகோ அதிகாரிகள் கேட்டனர்.
அதையொட்டி ஐதராபாத் பெங்களூருக்கு தனி, தனியாக இரண்டு விமான சேவைகளை வழங்கவுள்ள இண்டிகோ நிறுவனம், கொச்சி அல்லது திருப்பதிக்கு மூன்றாவது விமான சேவையை இயக்குவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், 'ஏர்சபா' என்ற விமான நிறுவனம் 19 பேர் பயணிக்கூடிய சிறிய ரக விமானத்தை 1,500 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் புதுச்சேரி - சென்னைக்கு தினசரி ஐந்து முறை இயக்க உள்ளதாகவும் இந்த சேவை, விரைவில் துவங்கும் என விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.