/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாயை ஏவி கொலை மிரட்டல்: பெண் மீது வழக்கு
/
நாயை ஏவி கொலை மிரட்டல்: பெண் மீது வழக்கு
ADDED : மே 18, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நாயை ஏவி கொலை மிரட்டல் விடுத்த பெண் மற்றும் அவரது பணியாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி அரியாங்குப்பம், ஸ்ரீநிவாஸ் நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன், 50; இவரது சகோதரி பூவை மற்றும் அவரது மகள் திருமகளுக்கு சொந்தமான வீடு புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில் உள்ளது.
இந்த வீட்டின் கீழ் தளத்தில் திலகம் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். வீட்டின் வாடகை வசூல் மற்றும் பராமரிப்பு பணிகளை குமரன் மேற்கொள்கிறார்.
வீட்டின் முதல் தளத்தை சுத்தம் செய்வதற்காக, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பர் முனியாண்டி, 44; என்பவருடன், வேலையாட்கள் 4 பேரை கடந்த 8ம் தேதி குமரன் அனுப்பி வைத்தார். சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு வாங்கி வருவதற்காக முனியாண்டி மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கினார்.
அப்போது, கீழ்தளத்தில் வாடகை இருக்கும் திலகம் ராஜேஸ்வரி, தனது பணியாளர் மோகன் மூலம் தான் வளர்க்கும் நாயை அவிழ்த்து விட்டு, முனியாண்டியை கடிக்க வை என, கூறினார். சங்கிலியை விட்டதும் நாய் முனியாண்டியை கவ்வியது. முனியாண்டி அலறியதால், மோகன் நாயை பிடித்து கொண்டார்.
முனியாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இது தொடர்பாக மோகன் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.
நாயை ஏவி கொலை மிரட்டல் விடுத்த திலகம் ராஜேஸ்வரி மற்றும் பணியாளர் மோகன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

