/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி ; திண்டிவனம் பெண் கைது
/
போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி ; திண்டிவனம் பெண் கைது
போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி ; திண்டிவனம் பெண் கைது
போலி உயில் தயாரித்து ரூ.5 கோடி நிலம் மோசடி ; திண்டிவனம் பெண் கைது
ADDED : மார் 09, 2025 03:28 AM
புதுச்சேரி: மூலக்குளத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்திற்கு போலி உயில் தயாரித்து மோசடி செய்த வழக்கில், திண்டிவனம் பெண்ணை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கலவை சுப்புராய செட்டியார் தெருவைச் சேர்ந்த ரங்கநாதன். பல ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை எதிரில் 5 லட்சம் சதுரடி நிலம் உள்ளது. ரங்கநாதனுக்கு வாரிசு இல்லை.
இவரது வீட்டில் வேலை செய்ததாக கூறி, திண்டிவனம், முளைச்சூர் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், 50; என்பவருக்கு, இறந்த ரங்கநாதன் தனது நிலத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான, 50 ஆயிரம் சதுரடி இடத்தை மட்டும் உயில் எழுதி கொடுத்ததாக, போலி உயில் தயாரித்துள்ளனர். புதுச்சேரி சாரம் அய்யப்பன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரன், 50; போலி உயில் மூலம் அந்த நிலத்திற்கு 'பவர்' எழுதி பெற்றார்.
பின், லாஸ்பேட்டை அசோக் நகர், கவிக்குயில் வீதியைச் சேர்ந்த பலராமன் என்பவரிடம், 50 ஆயிரம் சதுரடி நிலத்திற்கு ரூ. 4.5 கோடிக்கு புரோக்கர் முத்துக்குமரன் விலை பேசினார். நிலத்திற்கு ரூ. 30 லட்சம் முன்பணம் முத்துக்குமரனுக்கு அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடம் இறந்துபோன ரங்கநாதன் பெயரில் இருப்பதும், முத்துக்குமரன் சமர்ப்பித்த முனியம்மாள் பெயரிலான உயிலில் ரங்கநாதன் கையெழுத்தும், பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உண்மையான உயிலில் இருக்கும் கையெழுத்துக்கும் வித்தியாசம் இருந்தது. இதனால் பத்திர பதிவு செய்ய உழவர்கரை சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் மறுத்தது.
போலி உயில் கொடுத்து ஏமாற்றியதாக பலராமன், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் மோசடி வழக்குப் பதிந்து, முனியம்மாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.