/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்... உச்சகட்டம்
/
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்... உச்சகட்டம்
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்... உச்சகட்டம்
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்... உச்சகட்டம்
ADDED : செப் 18, 2024 04:49 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருவதால், வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து பிரச்னைக்கு அரசு தொலைநோக்கு திட்டம் தீட்டி, தீர்வு காண வேண்டும்.
புதுச்சேரி நகரம் 15 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட பகுதி. சின்னஞ்சிறிய அழகிய சுற்றுலா தளம். பிரஞ்சு கலாசாரம், தமிழர் பாரம்பரியம் கலந்த கலைநயத்துடன் கட்டிய கட்டடங்களும், நேரான வீதிகள், கடற்கரை, ஆன்மிக தளங்கள் இருப்பதால் நாட்டின் பல பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சின்ன சிறிய பகுதி என்பதால், தெருவுக்கு தெரு அரசியல்வாதிகள், போலீஸ்காரர், அரசு அதிகாரிகள் வசிப்பதால், ஆக்கிரமிப்பு, விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதனால் நகர சாலைகள் அனைத்திலும் ஆக்கிரமிப்பும், நிரந்தர வாகன பார்க்கிங் இடங்களாக மாறிவிட்டதால் சாலையின் சுருங்கி விட்டது. டிராபிக் பிரச்னை ஒவ்வொரு நாளும் பூதாகரமாக உருவாகி வருகிறது.
பிரதான சிக்னல்களில் விளக்குகள் பழுதாகி கிடப்பதும், சாலையோரம் நீண்ட வரிசையில் பஸ், லாரிகள், கிரேன் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் டிராபிக் ஜாம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
நகர பகுதிக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும், நத்தை போல ஊர்ந்து செல்லும் நிலை தான் தற்போது உள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள், மூகூர்த்த நாட்கள் வந்து விட்டால், நாள் முழுதும் நிலவும் டிராபிக் ஜாமில் சிக்கி மக்கள் பாடாய்படுகின்றனர்.
ஒரு சிக்னல் ஆயிரம் பிரச்னைகள்
ராஜிவ் சிக்னலில் வழுதாவூர் சாலை டேட்டா மேட்டிக் அலுவலகம் எதிரிலும், முருகா தியேட்டர் எதிரில் கோரிமேடு செல்லும் பஸ் பாதை, இ.சி.ஆர்., என 3 இடத்திலும், பஸ் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்துவதற்கு பதில், நடுரோட்டில் பயணிகளை ஏற்றி இருக்குவதால் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. அக்கார்டு ஓட்டல் 'பிரி லெப்ட்' பாதையில் வாகனங்கள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. சாலையோர வாய்க்கால் மீது மூடப்படாத சிலாப் உள்ளது.
இந்திரா சிக்னலில் சிக்னல் விளக்குகள் பழுதாகி கிடக்கிறது. சிக்னலில் காத்திருக்கும் நேரம் முடிந்து விட்டதா, இன்னும் காத்திருக்க வேண்டுமா என தெரியாமல் கடப்பதால் நாள் முழுதும் கடும் 'டிராபிக் ஜாம்' ஏற்படுகிறது.
கல்வித்துறை வளாகம் அருகில், சாலையில் பாதி இடம் தனியார் ஓட்டல்களின் பார்க்கிங் இடமாக மாற்றப்பட்டு, கார்கள் நிறுத்துவதால் 'ப்ரிலெப்ட்' வழி மூடப்பட்டு விடுகிறது. இதனால் 'பிரிலெப்ட்' பாதையில் செல்ல வேண்டிய வாகனங்கள் கூட நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கொக்கு பார்க் சிக்னலில் போலீசார் பணியில் இல்லாததால், 4 பக்கமும் வாகனங்கள் முட்டி மோதி கொள்கின்றன.
புதுச்சேரியில் உச்சகட்டத்திற்கு சென்றுள்ள டிராபிக் பிரச்னையால் நேற்று முன்தினம் ஆய்வுக்கு சென்று திரும்பிய கவர்னர் கைலாஷ்நாதன் கூட சிக்கி கொண்டார். அதே நாளில் தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வமும் இந்திரா சிக்னலில் சிக்கி கொண்டார். புதுச்சேரியின் உண்மையான டிராபிக் பிரச்னை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் தங்களின் 'சைரன்' வைத்த கார்களை விடுத்து, சாதாரண கார் அல்லது பைக்கில் காலை, மாலை நேரத்தில் நகர பகுதிக்குள் சென்று வர வேண்டும்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் உச்சகட்டம் அடைந்து வரும் போக்குவரத்து பிரச்னை தீர்வு காண, மிகப்பெரிய திட்டங்களை தீட்டுவதிற்கு பதில் முதலில் டிராபிக் சிக்னல், சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு, நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் வாகனங்களை அகற்றி வழி ஏற்படுத்தினாலே பாதி பிரச்னை தீரும்.

