/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிகளை மீறும் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'; கண்டமங்கலத்தில் இரு மாநில போலீசார் கைகோர்ப்பார்களா?
/
விதிகளை மீறும் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'; கண்டமங்கலத்தில் இரு மாநில போலீசார் கைகோர்ப்பார்களா?
விதிகளை மீறும் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'; கண்டமங்கலத்தில் இரு மாநில போலீசார் கைகோர்ப்பார்களா?
விதிகளை மீறும் கனரக வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'; கண்டமங்கலத்தில் இரு மாநில போலீசார் கைகோர்ப்பார்களா?
ADDED : மே 02, 2024 11:43 PM
புதுச்சேரி: போக்குவரத்து மாற்றப்பட்ட பாதையில் செல்லாமல், கண்டமங்கலம், பெரியபாபுசமுத்திரம் வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை பணிகளின் ஒரு பகுதியாக, கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, நான்கு வழிச்சாலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அதாவது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் மதகடிப்பட்டில் இருந்து திரும்பி கலிதீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் அரியூர் அடுத்த சிவராந்தகம், கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, பள்ளிநேலியனூர், திருபுவனைபாளையம், திருபுவனை வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் பைக்குகள், கார்கள் திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், ராஜபுத்திர பாளையம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மாற்று பாதை வழியாக சென்றால், கூடுதலாக 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும் என்பதால், புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், பத்துக்கண்ணு, செல்லிப்பட்டு, பெரியபாபுசமுத்திரம், கண்டமங்கலம் வழியாக செல்கின்றன.
அதேபோல், விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் கண்டமங்கலம் சர்வீஸ் சாலை வழியாக பெரியபாபுசமுத்திரம், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு வழியாக வில்லியனுாருக்கு செல்கின்றன. இதனால் 5 கி.மீ., வரை மிச்சமாகிறது.
சுற்றி செல்வதை தவிர்க்க குறுகலான கிராம சாலையில் இப்படி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களால் கண்டமங்கலம் சர்வீஸ் சாலை, பெரியபாபுசமுத்திரம், செல்லிப்பட்டு வரை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நேருக்கு நேராக வாகனங்கள் மோதும் அபாயமும் எழுந்துள்ளது.
குறிப்பாக, கண்டமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் பாதை அருகில் உள்ள வளைவுகளில் வாகனங்கள் நேருக்கு நேராக சிக்கி கொண்டு தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் நேற்று மாலை, எதிரெதிராக வந்த இரண்டு பஸ்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது, இந்த வழியாக வந்த டிரெய்லர் வாகனத்தாலும் போக்குவரத்து முடங்கியது. முக்கால் மணி நேரத்துக்கு பிறகே போக்குவரத்து சீரடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமும் தொடரும் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண புதுச்சேரி போக்குவரத்து போலீசாரும், கண்டமங்கலம் போலீசாரும் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்று பாதைகளில் பஸ் உள்ளிட்ட கனரக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.