/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப் பதிவு அதிகாரிகளுக்கு பயிற்சி
/
ஓட்டுப் பதிவு அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : ஏப் 08, 2024 05:42 AM

புதுச்சேரி: ஓட்டுப் பதிவு அதிகாரிகளுக்கு நிகழ்நேர கண்காணிப்பு பயிற்சி நேற்று நடந்தது.
லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 967 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2,880 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 1,486 வி.வி.பா., இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 7,094 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை நிகழ்நேர முறையில் கண்காணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டு சதவீதத்தை உடனுக்குடன் நிகழ்நேர கண்காணிப்பு முறையில் பதிவு செய்வது குறித்து ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி புதுச்சேரி, தேசிய தகவலியல் மையத்தில் நிகழ்நேர வாக்குப்பதிவுக் கண்காணிப்புக் குழுவின் மூலம் 16 மையங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மையங்களில், வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
அப்போது, பயிற்சியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கமாகக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என, ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவக் காரணங்களைக் காட்டி வாக்குப்பதிவுப் பணியிலிருந்து விலக்கு கோரியவர்களின் விண்ணப்பங்கள் மருத்துவ ஆய்வுக்குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும். விண்ணப்பதாரர்களின் உடல் ஆரோக்கிய நிலை குறித்து மருத்துவ ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அன்றாட அலுவல் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
விலக்குக் கோரியவர்களின் விண்ணப்பங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று மருத்துவ ஆய்வுக்குழு கண்டறிந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

