ADDED : ஜூன் 27, 2024 02:56 AM

புதுச்சேரி: ஆபாசமாக பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் ஊர்வலமாக சென்று முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் திருநங்கைகளிடம் ஆபாசமாகவும், பாலியல் உள் நோக்கத்தோடு பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, சங்க நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுாற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஊர்வலமாக சென்றனர்.
சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவன தலைவி ஷீத்தல் தலைமை தாங்கினார். புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன், எலிசபத்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம், ராஜா தியேட்டரில் இருந்து புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி, ஆம்பூர் வழியாக சட்டசபை நோக்கி சென்றனர். அவர்களை பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் மட்டும் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.