ADDED : ஜூன் 24, 2026 09:52 PM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே பைபாஸ் சாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன், 35; ஏ.சி மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் பைபாஸ் சாலை வழியாக வீட்டிற்கு சென்றார். அதேபோன்று, பொக்லைன் ஆப்பரேட்டரான, அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த இடையாக்குறிச்சியை சேர்ந்த செந்தில்வேல் மகன் புரட்சிதமிழன் 26; குமராட்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி பைக்கில் சென்றார்.
காட்டுமன்னார்கோவில் அருகே பைபாசில் திருமூலஸ்தானம் சந்திப்பு அருகே சென்றபோது, இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில், புரட்சிதமிழன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகனை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
