வைத்திலிங்கம் எம்.பி., கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் பதில்
வைத்திலிங்கம் எம்.பி., கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் பதில்
ADDED : ஆக 04, 2026 08:52 PM
புதுச்சேரி: இயற்கை வேளாண்மையில் இளைஞர்களின் பங்களிப்பு, இயற்கை வேளாண்மையை நிலையான தொழில் மற்றும் தொழில் முனைவு வாய்ப்பு, விளைபொருட்களின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து வைத்திலிங்கம் எம்.பி., லோக்சபாவில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதில் அளித்து பேசுகையில், ‘இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு 2015–16 முதல் பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.
பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு எக்டருக்கு ரூ.31,500 நிதியுதவி, வடகிழக்கு மாநிலங்களுக்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46,500 நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும், இயற்கை சான்றிதழ் திட்டத்தின் கீழ், இதுவரை 16.35 லட்சம் எக்டர் நிலப் பரப்புக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் பிராண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை உற்பத்தித் திட்டத்தின் கீழ், 39.68 லட்சம் எக்டர் நிலப்பரப்பு சான்றளிக்கப்பட்டு, இயற்கை விளைபொருட்கள் இணையவழி சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
2025–26ம் ஆண்டில் 3,03,249.40 மெட்ரிக் டன் இயற்கை விளைபொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய, இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நாடு முழுதும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தேசிய கூட்டுறவு இயற்கை நிறுவனம் மூலம் ‘பாரத் இயற்கை’ என்ற பெயரில் சான்றளிக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இயற்கை வேளாண்மை தொடர்பான தொழிற்பயிற்சிகள், டிஜிட்டல் வேளாண்மை மிஷன், வேளாண் உட்கட்டமைப்பு நிதி, வேளாண் தொழில் முனைவு மேம்பாட்டு, குறைந்த வட்டியிலான விவசாயக் கடன் மூலம் இளம் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுகின்றனர். அதனை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றார்.
