லோக்சபாவில் சி.எஸ்.ஆர். நிதி குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
லோக்சபாவில் சி.எஸ்.ஆர். நிதி குறித்து வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி
ADDED : ஆக 03, 2026 08:33 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., எம்.பி., வைத்திலிங்கம் நடந்து வரும் லோக்சபா கூட்டத்தொடரில் நேற்று சி.எஸ்.ஆர். நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.
அதில், நாடு முழுதும் சமூக நன்மைகளை உருவாக்கும் வகையில், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்துள்ளதா, ஆராய்ச்சி, புதுமை, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சமூகத் தொழில்முனைவு முயற்சிகளுக்கு நிதியை ஊக்குவிக்கும் வகையில் அரசு உருவாக்கியுள்ள செயல்முறை என்ன, இல்லையெனில் அதற்கான காரணம்.
புத்தாக்க முயற்சிகளுக்கு நிதியளித்தல், சமூகத் தொழில்முனைவை வலுப்படுத்துதல் மற்றும் நீடித்த, சமூகப் பலன்களை உருவாக்கும் உயர்தாக்கம் கொண்ட அமைப்புகளின் வளர்ச்சிக்கு சி.எஸ்.ஆர். பங்கை விரிவுபடுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசியதாவது:
கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாலின சமத்துவம், சுகாதாரம், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், திறன் மேம்பாடு, பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள், குடிசைப் பகுதிகள் மேம்பாடு உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் அதில் அடங்கும்.
மேலும், நிறுவனங்களின் துாய கங்கை நிதியும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரநிலை நிவாரண நிதியும், சுவச்ச் பாரத் கோஷ் ஆகிய நான்கு நிதிகளுக்கும் பங்களிப்பு வழங்குவதன் மூலம் நாடு முழுதும் சமூகப் பலன்களை உருவாக்க முடியும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளில் செயல்படும் இன்குபேட்டர்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சி.எஸ்.ஆர். நிதி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.
