விழுப்புரம் ஆய்வுக்கூட்டம் தி.மு.க., – அ.தி.மு.க., புறக்கணிப்பு
விழுப்புரம் ஆய்வுக்கூட்டம் தி.மு.க., – அ.தி.மு.க., புறக்கணிப்பு
ADDED : ஜூலை 07, 2026 06:52 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற நிலையில், தி.மு.க., – அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.
விழுப்புரத்தில் அனைத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பங்கேற்று, அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில், விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் விக்கிரவாண்டி சிவக்குமார், செஞ்சி கணேஷ்குமார் பங்கேற்று தங்கள் தொகுதிகளில் உள்ள மக்களுக்கான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள், திட்டப்பணிகள் தாமதம், கோரிக்கைகள் குறித்தும் பேசி, தீர்வு காணவும் வலியுறுத்தினர்.
அதற்கு, அமைச்சர் ஆனந்த் பதில் அளித்து, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம், உங்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், விழுப்புரம், வானுார் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், கவுதம் மற்றும் மயிலம், திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சண்முகம், பழனிசாமி ஆகியோரும், தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர சேர்மன்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
திண்டிவனம் தொகுதி வி.சி., எம்.எல்.ஏ.,வான அமைச்சர் வன்னி அரசும் பங்கேற்கவில்லை. சமூகநீதித்துறை அமைச்சரான அவர், வேறு அரசு விழாவிற்கு சென்றதால், அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
