ADDED : ஜூன் 05, 2024 12:33 AM

காங்.,வேட்பாளர் முன்னிலை
தியானத்தில் நமச்சிவாயம்
ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியதும் காங்.,பா.ஜ., அரசியல்கட்சியினர் திக்.. திக்.. மனநிலையில் ரிசல்ட்டினை எதிர்நோக்கி இருந்தனர். எப்படியும் வெற்றிப் பெற்று விடுவோம் என்று நம்பிக்கையில் இருந்த பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் கருவடிக்குப்பம் சற்குரு சித்தானந்த கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
முதல் சுற்றில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்ற நிலையில் காலை 11.30 மணிக்கு நமச்சிவாயம் கருவடிக்குப்பம் சித்தானந்த கோவிலுக்கு தொண்டர்களுடன் வந்தார்.
மூலஸ்தானத்தில் முட்டிபோட்டி சுவாமியை வணங்கி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கண்களை மூடி மூலதானஸ்த்தில் மூலவரை நோக்கிய அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற நிலையில் மாலை 3.30 மணியளவில் அங்கிருந்து இறுக்கமாக மனநிலையுடன் புறப்பட்டு சென்றார்.
முதல் சுற்றிலேயே வெளியேறிய
அ.தி.மு.க.,வினர்
புதுச்சேரி அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை நடந்த கொண்டு இருந்தபோது,அ.தி.மு.க.,வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு என நாம் தமிழர் கட்சி முன்னேறியது. அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தினை, அ.தி.மு.க., நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.அதை கண்டு அ.தி.மு.க., முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விரக்தியில் ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறினர்.
கூலாக முதல்வர்
டென்ஷனாக வைத்திலிங்கம்
ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்க கூலாக முதல்வர் நேரு வீதியில் உள்ள தனது நண்பரின் வாட்ச் கடைக்கு வந்தார். அங்குள்ள தனது நண்பர்களுடன் வழக்கம்போல் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார்.
அதேவேளையில் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் டென்ஷனுடன் கந்தப்பா வீதியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தார்.பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் 22 எம்.எல்.,ஏக்கள் பலத்துடன் தேர்தலில் போட்டியிட்ட சூழ்நிலையில் பரபரப்புடன் இருந்த வைத்திலிங்கம்,தான் முன்னிலையில் பெற்றதும் அங்கிருந்து காரில் வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அங்குள்ள தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து லாஸ்பேட்டையில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு சென்ற முகவர்களுடன் உற்சாகமாக பேசி கொண்டு இருந்தார்.
காங்.,வேட்பாளர் முன்னிலை
களை இழந்த கலைஞர்கள்
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றிப் பெற்றதும்,அவரை கருவடிக்குப்பம் சித்தானந்த கோவிலில் இருந்து தடபுடமாக ஊர்வலமாக அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர்.
இ.சி.ஆர் ., சிவா விஷ்ணு மண்டபத்தில் கலைஞர்களுடன் திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகள் பொம்மைகளுடன் கொண்டாட்டத்திற்கு ரெடியாக இருந்தனர். ஆனால் காங்.,வேட்பாளர் முன்னிலை என தெரிய வந்ததும் அனைவரும் சோர்வடைந்தனர். பொம்மைகளை கழற்றி வைத்து, அங்கிருந்து அனைவரும் வெளியேறினர்.