ADDED : ஜூன் 22, 2024 04:16 AM
புதுச்சேரி, : அரியூர் பாரதி நகரில் கழிவுநீர் வாய்க்கால் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து, அரியூர் கிராமம் பாரதி நகர் மெயின்ரோட்டில் சாலையோர வாய்க்கால் கடந்த பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாரதி நகர் மெயின்ரோடு கழிவுநீர் வாய்க்கால் பகுதியில், தரைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் சப்ளை நின்றவுடன், கழிவுநீர் குடிநீர் குழாயில் கலக்கிறது. இதனால் காலரா உள்ளிட்ட தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கழிவுநீர் பகுதி அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.