/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கல்வி நிறுவனங்களின் ரேங்க் என்ன?
/
புதுச்சேரி கல்வி நிறுவனங்களின் ரேங்க் என்ன?
ADDED : ஆக 18, 2024 04:25 AM
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களான கல்லுாரிகள், பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. இந்தாண்டிற்கான தேசிய தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழகங்களில், தனியார் துறையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகமான பாலாஜி வித்யாபீட மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, நாட்டின் 100 சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் 49.14 மதிப்பெண்களுடன் 68வது இடத்தைப் பெற்றுள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகம் 101 - 150 தரவரிசையில் உள்ளது.
மருத்துவக் கல்லுாரிகள் பிரிவில், ஜிப்மர் 70.74 புள்ளிகளுடன் நாட்டிலேயே 5 வது இடத்தைப் பிடித்துள்ளது, மேலும், ஜிப்மர் கடந்த பதிப்பில் 6வது இடத்தில் இருந்து அதன் தர வரிசையை மேம்படுத்தியுள்ளது. தனியார் துறையில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 51.02 மதிப்பெண்களுடன் 47வது ரேங்க் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் 50 மருத்துவக் கல்லுாரிகளின் பட்டியலில் புதுச்சேரி அரசு நடத்தும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட வேறு எந்த மருத்துவக் கல்லுாரியும் இல்லை.
பொறியியல் கல்லுாரிகளில் காரைக்கால் தேசிய தொழில் நுட்ப நிறுவனம் 44.38 புள்ளிகளுடன் 97வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த பதிப்பில் 133வது இடத்தில் இருந்த நிலையில் அதன் நிலையை மேம்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ள முதன்மையான புதுச்சேரி பொறியியல் கல்லுாரி உட்பட மற்ற பொறியியல் கல்லுாரிகள் எதுவும் நாட்டின் முதல் 100 பொறியியல் கல்லுாரிகளில் இடம் பெறவில்லை.
அம்பேத்கர் சட்டக் கல்லுாரி, நாட்டின் தரவரிசையில் உள்ள சட்டக் கல்லுாரிகளின் முழுப் பட்டியலிலும் இடம் பெறவில்லை. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் பிரிவில், யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 கல்லுாரிகளில், காஞ்சி மாமுனிவர் முதுகலை ஆய்வு மையம் 53.80 மதிப்பெண்கள் பெற்று 77வது இடத்தையும், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 151--200 ரேங்க் பேண்டிலும் உள்ளது.
பாரதிதாசன் பெண்கள் கல்லுாரி 201- 300 ரேங்க் பேண்டில் உள்ளது. புதுச்சேரியின் பல், மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பிரிவில் உள்ள எந்த நிறுவனமும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை.

