ADDED : மே 05, 2026 05:40 PM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி, ஒட்டு எண்ணிக்கையின் போது புகார் கடிதம் அளித்ததால், தேர்தல் முடிவு தாமதமானது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்து. இந்நிலையில், 23 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரி, தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகிய மூன்று இடங்களில் நேற்று முன்தினம் நடந்தது. 29 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உழவர்கரை தொகுதிக்கு மட்டும் முடிவுகள் வெளியிட தாமதம் ஆனது.
மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், உழவர்கரை தொகுதிக்கு நேற்று முன்தினம் 3 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. 5 வது சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போது, 41வது ஓட்டுச்சாவடி இயந்திரத்தை எடுத்தனர். அப்போது அதில் உள்ள டோக்கனில் இயந்திரத்தின் நம்பருக்கு பதிலாக டேக் நம்பர் குறிப்பிடபட்டிருந்தது. இதுகுறித்து, வி.சி.க.,வினர். கேள்வி எழுப்பினர். அப்போது அங்கிருந்த தாவெ.க.,வினரும் இதுகுறித்து ஆர்.ஓ.விடம் புகார் கடிதம் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் துறையினர் இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி., சோதனை செய்தபோது, எந்த மாற்றமும் இன்றி ஓட்டுகள் சரியாக இருந்தது. இதையடுத்து டேக்கில் மட்டும் நம்பர் மாற்றி எழுதப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கினர். அப்போது புகார் கடிதம் அளித்த த.வெ.க.,வினர் அங்கு இல்லை.
புகாரை அடுத்து, இறுதியாக குலுக்கல் முறையில் மேலும் 5 ஓட்டுச்சாவடி இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அதில் அனைத்தும் சரியாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து புகார் நிராகரிக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்தது. பின் தாமதமாக இரவு 10:15 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
