/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியமன விதியை மாற்றாதது ஏன்? பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்தவர்கள் கேள்வி
/
நியமன விதியை மாற்றாதது ஏன்? பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்தவர்கள் கேள்வி
நியமன விதியை மாற்றாதது ஏன்? பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்தவர்கள் கேள்வி
நியமன விதியை மாற்றாதது ஏன்? பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்தவர்கள் கேள்வி
ADDED : ஆக 25, 2024 05:43 AM
காலத்துகேற்ப நியமன விதிகளை மாற்ற வேண்டும் என, பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம், லேப் அசிஸ்டெண்டுகள், லேப் டெக்னீஷியன்கள், லேப் அட்டெண்டன்ட்களின் பதவி உயர்வுக்காக, ஐந்தாண்டுகள் பணியை முடித்து, எஸ்.எஸ்.எல்.சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களின் சேவை பற்றிய விவரங்களை கேட்டுள்ளது.
இது பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்த வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்சி., ஆட்சேர்ப்பு விதியின்படி, மூத்த லேப் டெக்னீஷியன் பதவி முதன்மையாக பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. ஒரு சிறிய சதவீதம் மட்டுமே நேரடி ஆள்சேர்ப்பு மூலம் நிரப்பப்படுகிறது.
மற்ற அரசு வேலைகளில் காலத்துகேற்ப நியமன விதிகள் திருத்தம் செய்யப்பட்டு பணி நியமனங்கள் நடக்கின்றன. ஆனால் மூத்த லேப் டெக்னீஷியன்கள் பொருத்தவரை 36 ஆண்டுகளுக்கும் மேலாக நியமன விதிகள் திருத்தம் செய்யப்படவில்லை.
கடந்த 1986ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆள்சேர்ப்பு விதியை புதுச்சேரி அரசு இன்னும் பின்பற்றி வருகிறது. இது என்ன நியாயம். இதன் காரணமாகவே அரசு வேலை தேடும் பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 600--800 பேர் பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்து வெளியே வருகின்றனர். ஆனால் குறைந்த அரசு வேலைவாய்ப்பினை மட்டுமே பெறுகின்றனர். மூத்த லேப் டெக்னீசியன் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் தகுதியற்ற முறையில் நிரப்பப்படுவது இன்னும் தொடர்கிறது. அதுவும் எஸ்.எஸ்.எல்.சி., மட்டும் போதும் என்கின்றனர்.
தற்போதைய பதவி உயர்வு முறை, நன்கு தகுதியான பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்தவர்களின் வாய்ப்பினை தடுத்து வருகிறது. இதை காலத்துகேற்ப மாற்றியமைக்க வேண்டும். விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என, பி.எஸ்சி., எம்.எல்.டி., முடித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

