/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுக்கடைகளுக்கு வழிஏற்படுத்த பேரிகார்டுகள் அகற்றம் குற்றவாளிகள் மீதுநடவடிக்கை பாயுமா?
/
மதுக்கடைகளுக்கு வழிஏற்படுத்த பேரிகார்டுகள் அகற்றம் குற்றவாளிகள் மீதுநடவடிக்கை பாயுமா?
மதுக்கடைகளுக்கு வழிஏற்படுத்த பேரிகார்டுகள் அகற்றம் குற்றவாளிகள் மீதுநடவடிக்கை பாயுமா?
மதுக்கடைகளுக்கு வழிஏற்படுத்த பேரிகார்டுகள் அகற்றம் குற்றவாளிகள் மீதுநடவடிக்கை பாயுமா?
ADDED : ஜூன் 18, 2024 04:47 AM

புதுச்சேரி: முள்ளோடையில் மதுக்கடைகளுக்கு செல்லுவதற்காக, சென்டர் மீடியன் தடுப்புக் கட்டைகளையும், போலீசார் வைத்திருந்தபேரிகார்டுகளையும் அகற்றி வழி ஏற்படுத்திய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, கன்னியக்கோவிலில் இருந்து முள்ளோடை வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டது.
இந்த சாலையில் முள்ளோடையில் உள்ள கென்னடி ஒயின்ஷாப் எதிரே, கடந்த நான்கு மாதங்களுக்கு முன், சென்டர் மீடியனின் ஐந்து தடுப்புக் கட்டைகள் நள்ளிரவில் திடீரென அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சாலையை கடக்க ஜீப்ரா கோடுகளும், சோலார் சிக்னல்களும் அமைக்கப்பட்டன.
தனியார் மதுக்கடைக்கு சாதகமாக சென்டர் மீடியனை உடைத்து தடுப்புக் கட்டைகளை அகற்றி வழி ஏற்படுத்துவதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த செயலை கண்டித்து பா.ம.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஒயின்ஷாப்பிற்கு எதிரே இரண்டு இரும்பு பேரிகார்டுகள் தற்காலிகமாக வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, தெற்கு போக்குவரத்து போலீசார் வைத்திருந்த இரண்டு பேரிகார்டுகளையும் மர்ம நபர்கள் துாக்கி சாலையோரம் வீசி எறிந்துவிட்டு, மீண்டும் தனியார் மதுக்கடைகளுக்கு செல்ல வழியை ஏற்படுத்தியுள்ளனர். இது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் துாக்கி வீசப்பட்ட பேரிகார்டுகளை, போக்குவரத்து போலீசார் மீட்டு, இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டு, மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளனர்.அதே நேரத்தில், கிருமாம்பாக்கம் போலீசார், மதுக்கடைகளுக்கு சாதகமாக பேரிகார்டுகளை அகற்றிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பேரிகார்டுகளை அகற்றியவர்கள் யார் என்று தெரியவில்லை; விசாரித்து வருகிறோம் என சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை மூடி மறைப்பதிலேயேகுறியாக இருக்கின்றனர்.
குற்ற புலனாய்வில் போலீசாருக்கு தெரியாத தொழில்நுட்பம் கிடையாது. பேரிகார்டுகள் அகற்றப்பட்ட இடத்தின் எதிரே 24 மணி நேரமும் செயல்படும் பெட்ரோல் பங்க் உள்ளது. சுற்றிலும் திருமண மண்டபங்கள், மதுக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள்ஏராளமாக உள்ளன. அனைத்து இடங்களிலும் 'சிசி டிவி' கேமராக்கள் உள்ளன.
இவற்றை ஆராய்ந்தாலே குற்றவாளியை பிடித்து விடலாம். ஆனால், பார்க்கிறோம்.... விசாரித்து வருகிறோம்... என சப்பை கதை கட்டி வருகின்றனர்.
பேரிகார்டுகளை வைத்துள்ளது போக்குவரத்து போலீசார் என்பது நன்றாக தெரிந்தும்கூட, அப்பகுதியில் உள்ள மதுக்கடையினர் துணிச்சலாக துாக்கி எறிந்துள்ளனர். இதை அப்படியே விட்டால், அடுத்தடுத்துசாலையில் உள்ள அனைத்து பேரிகார்டுகளையும் ஒவ்வொன்றாக துாக்கி எறிந்துவிட்டு தைரியமாக வழியை ஏற்படுத்துவர்.
இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் போலீசார் மீது பயம் இருக்காது. எனவே போலீசார் வைத்த பேரிகார்டுகளை எடுத்து வீசியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

