/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆக்ரோஷ நாய்களுக்கு தடை விதிக்கப்படுமா?
/
புதுச்சேரியில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆக்ரோஷ நாய்களுக்கு தடை விதிக்கப்படுமா?
புதுச்சேரியில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆக்ரோஷ நாய்களுக்கு தடை விதிக்கப்படுமா?
புதுச்சேரியில் மக்கள் பாதுகாப்பிற்காக ஆக்ரோஷ நாய்களுக்கு தடை விதிக்கப்படுமா?
ADDED : மே 10, 2024 11:33 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆக்ரோஷம் கொண்ட வளர்ப்பு நாய்களை உரிமம் இன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை இரண்டு 'ராட்வீலர்' இன நாய்கள் கடித்து குதறியது. அடுத்த நாள் சூளைமேடு பகுதியில் வாக்கிங் சென்ற தம்பதியை நாய் கடித்து மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான இடங்களில் நாய் கடி சம்பவங்கள் பதிவாகி வருகிறது. தெரு நாய்களை தொடர்ந்து வீட்டில் வளர்க்கும் நாய்களை 'வாக்கிங்' அழைத்து செல்லும்போது, பொதுமக்களை கடிக்கும் சம்பவம் அதிகரிப்பால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கும் இனங்கள் என அடையாளம் காணப்பட்டன. அதில் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், சென்ட்ரல் ஆசியன் ெஷபர்டு, போயர் போயல், ராட்வீலர், டெரியர், உல்ப் டாக், ஜப்பானிஸ் தோசா அகிடா உள்ளிட்ட 23 வகை நாய்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணியாக விற்பனை செய்யவும் நேற்று முன்தினம் தமிழக அரசு தடை விதித்து நேற்று அதனை வாபஸ் பெற்றது.
புதுச்சேரியில் ஆக்ரோஷம் மிக்க வெளிநாட்டு கலப்பு இன நாய்கள் மட்டுமன்றி உள்நாட்டு நாய்களும் வளர்க்கப்படுகிறது. நாட்டு நாய்களில் கன்னி, சிப்பிபாறை உள்ளிட்ட சில இன நாய்கள், வேட்டைக்கு பயன்படுத்த கூடியவை. இந்த வகை நாய்களை வீடுகளில் வளர்க்கும் பழக்கும் அதிகரித்து விட்டது. இத்தகைய நாட்டு நாய்கள் ஆக்ரோஷம் கொண்டது.
நாய்கள் வளர்ப்போர், வெளியில் கூட்டிச் செல்லும்போது இணைப்பு சங்கிலி, வாய்கவசம், தரமான கழுத்துப்பட்டை அல்லது தோள்பட்டை அணிவித்து அழைத்து செல்வது கிடையாது. 'வாக்கிங்' செல்லும்போது நாய்களை கழற்றி விடுகின்றனர். வளர்ப்பு நாய்கள் சாலையில் 'வாக்கிங்' செல்வோரை கடிப்பதற்காக துரத்தும்போது, வயதானவர்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
வளர்ப்பு நாய்கள் தெருநாய்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்போது, நாய்கள் சாலையில் தாறுமாறாக ஓடுகிறது. அப்போது, வாகனத்தில் செல்வோர் மீது நாய்கள் ஓடி விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. நாய்கள் சண்டையிடும்போது வாகனத்தில் மோதி விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் குழந்தைகளை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் போன்று புதுச்சேரியில் நடப்பதற்கு முன்பு ஆக்ரோஷம் கொண்ட வெளிநாட்டு இன நாய்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்ஸ்:
உரிமம் பெற ரூ. 50 கட்டணம்:
கால்நடைத்துறை இயக்குநர் உமாமகேஸ்வரி கூறுகையில்; புதுச்சேரியில் அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் உரிமம் பெறுவது கட்டாயம். புதன் கிழமை தோறும் மறைமலையடிகள் சாலை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதுடன், நகராட்சியின் லைசன்ஸ் பெற வலியுறுத்துகிறோம். உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.50 மட்டுமே.
பாக்ஸ்:
196 நாய்களுக்கு லைசன்ஸ்;
புதுச்சேரியில் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்கள் என சுமார் 5000க்கும் அதிகமாக நாய்கள் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு புதுச்சேரி முழுதும் 196 நாய்களுக்கு மட்டுமே லைசன்ஸ் மற்றும் லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டது. இந்தாண்டு மே மாதம் முதல் வாரம் வரை, 110 நாய்களுக்கு லைசன்ஸ் புதுக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் நாய்களுக்கு லைசன்ஸ் வழங்கும் பணியை அனைத்து கால்நடை மருத்துவமனைகளில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.