/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் விழா முடிந்தும் அகற்றாத பேனர்களால் விபத்து அபாயம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
/
முதல்வர் பிறந்த நாள் விழா முடிந்தும் அகற்றாத பேனர்களால் விபத்து அபாயம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
முதல்வர் பிறந்த நாள் விழா முடிந்தும் அகற்றாத பேனர்களால் விபத்து அபாயம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
முதல்வர் பிறந்த நாள் விழா முடிந்தும் அகற்றாத பேனர்களால் விபத்து அபாயம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஆக 06, 2024 07:12 AM

புதுச்சேரி: முதல்வரின் பிறந்த நாள் முடிந்தும்கூட பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் உள்ள பேனர்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. மழை காலம் துவங்க உள்ளதால், இந்த பேனர்களை உடனடியாக அகற்றுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி, கடந்த 4ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நகரத்தின் பல்வேறு இடங்களில் சாலையோரத்திலும், சிக்னல்களிலும் பேனர்கள் வைத்துள்ளனர்.
முதல்வரின் பிறந்த நாள் விழா முடிந்தும்கூட, இந்த பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. இப்படி அகற்றப்படாமல் உள்ள பேனர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து அபாயமும் தலை துாக்கியுள்ளது.
அச்சுறுத்தி வரும் பேனர்கள் விவகாரத்தை, வேறு எங்கும் சென்று மாவட்ட நிர்வாகம் தேட தேவையில்லை. கலெக்டர் அலுவலகத்தின் பக்கத்திலேயே சில அடிகள் துாரத்தில் உள்ள ராணி மருத்துவமனைக்கு சென்று பார்த்தாலே போதும். முதல்வருக்கு அம்மருத்துவமனை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ள வாழ்த்து பேனர், மின்கம்பத்தில் சாய்ந்து விழும் நிலையில் மக்களை அச்சுறுத்தி வருவதை பார்க்க முடியும்.
இதுபோன்றே நகரின் பல்வேறு இடங்களில் முதல்வருக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அச்சுறுத்தும் வகையில் ஊசலாடிக் கொண்டுள்ளன. லேசாக காற்று வீசினாலே போதும். இவை வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழும் அபாயம் நிலவுகிறது.
மழை காலம் விரைவில் துவங்க உள்ளதால், காற்றின் வேகம் அதிகரிக்கும். குறிப்பாக, வடகிழக்கு பருவ மழை சீசனில் வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகி, சூறைக்காற்று வீசுவது வழக்கம். எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கி பேனர்களை அகற்ற வேண்டும்.
ஏற்கனவே, புதுச்சேரியில் பேனர்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இப்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களால் அசம்பாவிதம் நடந்து, உயிரிழப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுவது? பாதிக்கப்படும் குடும்பத்திற்கு யார் இழப்பீடு தருவது?
புதுச்சேரியில் சகட்டு மேனிக்கு பேனர்கள் வைக்கப்படும் விஷயத்தில் நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
பேனர்களால் அசம்பாவிதம் ஏற்பட்டால், பேனர் வைத்தவர்களும், கண்டும் காணாமல் உள்ள அரசு அதிகாரிகளும் தான் கோர்ட்டில் ஏறி பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
முதல்வரின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.