ADDED : ஏப் 10, 2024 01:37 AM
புதுச்சேரி,: கட்டுமான பணிக்கு சாரம் கட்ட பச்சை சவுக்கு மரம் துாக்கியபோது, உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வில்லியனுார் அருகில் உள்ள பெரம்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன், 35; கட்டட தொழிலாளி. இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளது.
அன்பழகன் ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர், 9வது குறுக்கு தெருவில், பூபாலன் என்பவர் வீட்டின் கட்டுமான பணி செய்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு கட்டுமான பணி பூச்சு வேலைக்காக சாரம் கட்ட பச்சை சவுக்கு மரத்தை துாக்கி நிறுத்தினார்.
அப்போது சாலையில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் சவுக்கு மரம் பட்டு, மின்சாரம் பாய்ந்து அன்பழகன் துாக்கி வீசப்பட்டார்.
அன்பழகன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காலை 11:30 மணிக்கு ஜிப்மர் மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர்.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் பகல் 1:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

