ADDED : செப் 04, 2024 10:59 PM

புதுச்சேரி: ஆரோவில்லில் நடக்கும் இளைஞர் முகாமில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் நேற்று அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றனர்.
மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், அரவிந்தரின் போதனைகளில் ஒன்றான 'வசுதைவ குடும்பகம்' (அனைவரும் ஒரே குடும்பம்) என்ற கருத்தை ஊக்குவிக்கும் வகையில், 5 நாள் இளையோர் முகாம் ஆரோவில்லில் நேற்று முன்தினம் துவங்கியது.
முகாமில் பங்கேற்க 530க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முகாமை ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, குஜராத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
ஆரோவில் அறக்கட்டளை இயக்குனர் சொர்ணாம்பிகா, சிறப்பு அதிகாரி வஞ்சுளவள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முகாமில் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறை ஆன்மிகம், செயல்பாட்டு தர்மம் போன்றவை குறித்து விளக்கப்படுகிறது.
இரண்டாம் நாளான நேற்று, முகாமில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் ஆரோவில்லில் இருந்து புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்து தியானம் செய்தனர். பின் கடற்கரை சென்று யோகா செய்தனர். தொடர்ந்து, ஆரோவில் திரும்பிய அவர்கள், மாத்ரி மந்திர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர்.
பின், சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஆன்மிக மற்றும் கலாசார பேச்சாளர் ராகவ் கிருஷ்ணா கலந்து கொண்டு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு குறித்தும், மறைந்திருக்கும் திறமைகள் குறித்தும் உரையாற்றினார். பேச்சாளர் கவுரவ் உரையாற்றினார்.
முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், அங்குள்ள பண்ணைகளில் பணி செய்தல், இசை சிகிச்சை அமர்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது.