/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 நாள் வேலைத் திட்டப்பணிகள் நிறுத்தம்! கடும் வெயில் காரணமாக உத்தரவு
/
100 நாள் வேலைத் திட்டப்பணிகள் நிறுத்தம்! கடும் வெயில் காரணமாக உத்தரவு
100 நாள் வேலைத் திட்டப்பணிகள் நிறுத்தம்! கடும் வெயில் காரணமாக உத்தரவு
100 நாள் வேலைத் திட்டப்பணிகள் நிறுத்தம்! கடும் வெயில் காரணமாக உத்தரவு
ADDED : மே 03, 2024 06:33 AM

புதுச்சேரி: மாநிலம் முழுதும் ௧௦௦ நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் கடும் வெயில் காரணமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என, அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.
புதுச்சேரியில் இத்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கி, அடுத்த மார்ச் மாதத்துடன் முடியும்.
அதன்படி புதுச்சேரியில் நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் வெயில் சதம் அடித்து மிரட்டி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் வேலை செய்வது இயலாத காரியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக சேர்ப்பு
மாநிலத்தினை பொருத்தவரை 2020-21ம் ஆண்டில் 53 ஆயிரம் பேரும், 2021-22ம் ஆண்டில் 41 ஆயிரம் பேரும், 2022-23ம் ஆண்டில் 46 ஆயிரம் பேரும், கடந்த 2023-24ம் ஆண்டில் 59 ஆயிரம் பேரும் வேலை செய்தனர்.
இந்தாண்டு கூடுதலாக 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே 69 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்ய உள்ளனர்.
அதிகரிக்க முடிவு
நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் ஆண்டிற்கு கொடுக்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் குறைந்த நாட்களே வேலை கொடுக்கப்படுகிறதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது 2020-21ம் ஆண்டில் 22 நாட்கள், 2021-22ம் ஆண்டில் 16 நாட்கள், 2022-23ம் ஆண்டில்-19 நாட்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இதையடுத்து சற்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் கடந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 42 நாட்கள் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எல்லாமே அதிகபட்சம்
மாநிலத்தில் இதுவரை சராசரியாக 8 லட்சம் மனித வேலைநாட்கள் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடந்தாண்டு தான் 22 லட்சம் மனித வேலைநாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த காலங்களில் 23 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ள சூழ்நிலையில், கடந்தாண்டு மட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாகவே மட்டும் 66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒட்டு மொத்தமாக 125 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ள குறிப்பிடதக்கது.