/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட முயற்சி மாஜி முதல்வர் உட்பட 100 பேர் கைது
/
அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட முயற்சி மாஜி முதல்வர் உட்பட 100 பேர் கைது
அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட முயற்சி மாஜி முதல்வர் உட்பட 100 பேர் கைது
அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட முயற்சி மாஜி முதல்வர் உட்பட 100 பேர் கைது
ADDED : மார் 27, 2025 03:47 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் வீட்டை முற்றுகையிட சென்ற முன்னாள் முதல்வர் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநில தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் கட்டட ஒப்பந்ததாரர் இளமுருகுவிடம் ரூ. 2 லட்சம், லஞ்சமாக பெற்றபோது சி.பி.ஐ. போலீசாரால் காரைக்காலில் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீட்டில் ரூ. 73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்., சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக்கோரி, புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள அமைச்சர் லட்சுமி நாராயணன் வீட்டிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து இருந்தனர். புதுச்சேரி காந்திவீதி, பெருமாள் கோவில் வீதி சந்திப்பு மற்றும் பாரதி வீதியில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காந்திவீதி - நேருவீதி சந்திப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் பரம்பத், வைத்தியநாதன், காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், மாநில மகளிர் காங்., தலைவி நிஷா, காங்., நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் காங்., கட்சி நிர்வாகிகள் பலர் நேற்று மாலை 5:00 மணியளவில் திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து காந்திவீதி வழியாக அமைச்சர் லட்சுமி நாராயணன் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை காந்தி வீதி - அரவிந்தர் வீதி சந்திப்பில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர்.
இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்கள் சாலையில் அமர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக்கோரியும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, சுப்பையா சாலையில் உள்ள கரிக்குடோனுக்கு கொண்டு சென்றனர். பின், அவர்களை விடுவித்தனர்.