ADDED : செப் 30, 2025 06:36 AM
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவின் 8ம் நாளான நேற்று 1008 லலிதா சஹஸ்ரநாம ஹோமம் மற்றும் கலசாபிஷேக பூஜைகள் நடந்தன.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, தினமும் சிறப்பு அலங்காரத்தில் வேதாம்பிகையம்மன் அருள்பாலித்து வருகிறார். 8ம் நாளான நேற்று வேதாம்பிகையம்மனுக்கு, மாலை 1008 லலிதா சஹஸ்ரநாம ஹோமம், கலசாபிஷேக பூஜைகள் நடந்தன.
இரவு 8.00 மணிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இன்று 30ம் தேதி சரஸ்வதி பூஜையும், நாளை (1ம் தேதி) விஜயதசமி வழிபாடும் நடக்கிறது.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி, மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.