/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.22 லட்சம் பெற்று மோசடி
/
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.22 லட்சம் பெற்று மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.22 லட்சம் பெற்று மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.22 லட்சம் பெற்று மோசடி
ADDED : ஜன 12, 2025 06:50 AM
புதுச்சேரி : கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் செவிலியர், அட்டண்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய எம்.டி.எஸ்., ஊழியர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி நாவற்குளம், பொதிகை நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. காங்., சிறப்பு அமைப்பாளர்.
இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்., மாதம் மூலக்குளம் ஜான்குமார் நகர், லுாயிஸ் செட்டியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி எம்.டி.எஸ். (பல்நோக்கு) ஊழியர் அருள் (எ) அருள்ராஜ் , 44; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் செவிலியர் மற்றும் அட்டண்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி வெங்கடாசலபதி தன்னிடம் வேலை செய்த வேல்முருகனுக்கு அட்டண்டர் வேலை வாங்கி தர, ரூ. 2 லட்சம் மற்றும் கல்வி ஆவணங்களை அருள்ராஜிடம் வழங்கினார்.
இதேபோல் வெங்கடாசலபதியின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வந்த, வாணி, கலைவாணி, தமிழ்செல்வி, உஷா, சாய்ராம், மகேஸ்வரி, குணபிரியா, ஹனுாரின் ஷிலா மோரிஸ், தமிழ்செல்வன், தமிழரசன், வடிவேல் என, 11 பேர் தலா ரூ. 2 லட்சம் கொடுத்தனர். கடந்த 2023 மார்ச் 15ம் தேதி, கதிர்காமம் மருத்துவக்கல்லுாரி இயக்குநர் கையெழுத்திட்டது போன்ற ஒரு ஆணையின் நகல் 12 பேருக்கும் அருள் வழங்கி, அசல் ஆணை 2 மாதத்தில் வந்து விடும் என உறுதி அளித்தார்.
ஆனால் பல மாதங்கள் கடந்தும் வேலை வாங்கி தராததால், வெங்கடாசலபதி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வெங்கடாசலபதி புகார் மனு மீது வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, லாஸ்பேட்டை போலீசார் அருள் (எ) அருள்ராஜ் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சிக்கியுள்ள அருள் (எ) அருள்ராஜ், ரெட்டியார்பாளையம் காங்., பிரமுகர் தாண்டவம் மகனுக்கு, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில் கடந்த டிச., 10ம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.