/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1.37 கோடி மாணவர்கள் பங்கேற்ற வீரகதை திட்டம்
/
1.37 கோடி மாணவர்கள் பங்கேற்ற வீரகதை திட்டம்
ADDED : பிப் 04, 2024 03:29 AM

நாடு முழுவதும் நடந்த 1.37 கோடி மாணவர்கள் பங்கேற்ற வீரகதை திட்டத்தில் புதுச்சேரி மாணவர்கள், சூப்பர்-100 பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் சார்பில், வீரகதை திட்டத்தின் மூன்றாவது பதிப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், 2.43 லட்சம் பள்ளிகளை் சேர்ந்த, 1.37 கோடி மாணவர்கள் பங்கேற்றனர்.
வீரகதை 3வது பதிப்பில் கட்டுரை மற்றும் பத்தி எழுதுவதற்கான சிந்தனையை துாண்டும் தலைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த முன்னுதாரண நபர்கள் குறித்து, குறிப்பாக வீரதீர விருது பெற்றவர்களை மையப்படுத்தி எழுதினர்.
இறுதியில், மாவட்ட மற்றும் மாநில அளவில் தொடர் மதிப்பீடுகளுக்குப் பின், கிட்டத்தட்ட 3,900 படைப்புகள் தேசிய அளவிலான மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டன. கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட 100 சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தது.
வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் சார்பில் டில்லியில் அண்மையில் நடந்தது. வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ .10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினர்களாக கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பை காணும் வாய்ப்பையும் பெற்றனர்.
3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இடம் பெற்ற 25 பேர் கொண்ட பட்டியலில் புதுச்சேரி பேட்ரிக் பள்ளி மாணவி ராக ரதி வந்தனா பத்தி எழுதுதல் பிரிவில் அசத்தி இடம் பெற்றார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பிரிவில் பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிறைசூடன் கவிதை பிரிவில் இடம் பெற்றார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பிரிவில் சங்கர வித்யாலயா பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கவிதை பிரிவில் இடம் பிடித்தார். ஒன்பதாம், பத்தாம் வகுப்பு பிரிவில் புதுச்சேரி மாணவர்கள் இடம் பிடிக்கவில்லை.
தேசிய அளவிலான சூப்பர் - 100 பட்டியலில் இடம் பெற்ற புதுச்சேரி மாணவர்கள் ரொக்கப் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றனர். இதில் மாணவி ராக ரதி வந்தனா, கவர்னர் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.