/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வியாபாரியிடம் ரூ.1.65 கோடி மோசடி
/
புதுச்சேரி வியாபாரியிடம் ரூ.1.65 கோடி மோசடி
ADDED : நவ 13, 2024 04:26 AM
புதுச்சேரி புதுச்சேரி வியாபாரியிடம் ரூ.1.65 கோடி மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சரவணன். எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
இவரை, கடந்த மே மாதம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன் லைனில் வியாபராம் செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார். அதனை நம்பிய சரவணன், மர்ம நபர் அனுப்பிய லிங்கில், தனது முழு விபரங்களை பதிவு செய்து, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் நுாறுக்கும் மேற்பட்ட தவணைகளில் ஒரு கோடியே 64 லட்சத்து 45 ஆயிரத்து 667 ரூபாய் முதலீடு செய்தார். அதில், அவருக்கு ரூ.10 கோடிக்கு மேல் பணம் லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சரவணன், தனது லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் இதுகுறித்து நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடி கும்பலை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறியதாவது.
ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, சமூக வலைதளங்களில் வரும் எந்த லிங்கையும் தொட வேண்டாம். மேலும், ஆன்லைனில் வரும் டிரேடிங், பகுதி நேர வேலை, ஆன்லைன் லோன், டிஜிட்டல் அரஸ்ட் உள்ளிட்ட எந்த தகவல் வந்தாலும் நம்ப வேண்டாம்.
இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930, 94892 05246, 0413-2276144 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.