/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்கள் தவறவிட்ட 18 போன்கள் ஒப்படைப்பு
/
பொதுமக்கள் தவறவிட்ட 18 போன்கள் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 13, 2025 12:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
இதில், சைபர் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை விரைவில் மீட்டுதர வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எஸ்.பி., பாஸ்கரன், பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'சமூக வலைதளங்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை நம்ப வேண்டாம். மும்பை, டில்லி போலீஸ், சி.பி.ஐ., ட்ராய் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது சைபர் மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி. ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அழைப்பை துண்டிக்கவும்.
சமூக வலைதளங்களில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரத்தை நம்பி யாரும் பணம் முதலீடு செய்ய வேண்டாம்' என்றார்.