ADDED : செப் 27, 2026 07:30 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே நர்ஸ் படுகொலையில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த கோபாலன்கடை, மெயின்ரோட்டை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ, 22; நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நர்ஸ். இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரவுடி குமார் (எ) கலைக்குமார் என்பவரும், காதலித்து வந்தனர்.
இதற்கிடையே கலைக்குமார் மீது வில்லியனுார், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவர், மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் கலைக்குமாருடன் பேசுவதை ஜெயஸ்ரீ நிறுத்திவிட்டார். சிறையில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன், ஜாமினில் வந்த கலைக்குமார், ஜெயஸ்ரீயிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்தார். ஆனால் ஜெயஸ்ரீ பேச மறுத்துள்ளார்.
இந்நிலையில் கலைக்குமார், தனது கூட்டாளிகள் உதவியுடன் ஜெயஸ்ரீயிடம் பேசுவதற்கு அழைத்து வரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஜெயஸ்ரீயை வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார். அதனை ஏற்று வீட்டின் எதிரே உள்ள பிரியதஷ்ணி நகரில் உள்ள முள்புதர் பகுதிக்கு சென்ற ஜெயஸ்ரீ அங்கு படுகொலை செய்யப்பட்டார்.
ஜெயஸ்ரீ தாய் கண்ணியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கலைக்குமார் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் கலைக்குமாரிடம் ஜெயஸ்ரீ பேசுவதற்கு அழைத்த கூட்டாளிகள் இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
