/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டிற்கு... 2 கிலோ கோதுமை; அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பு
/
அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டிற்கு... 2 கிலோ கோதுமை; அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டிற்கு... 2 கிலோ கோதுமை; அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் ரேஷன் கார்டிற்கு... 2 கிலோ கோதுமை; அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜூலை 17, 2025 06:52 AM

பாகூர்: ரேஷன் கார்டிற்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன், அடுத்த மாதம் முதல் 2 கிலோ கோதுமையும் சேர்த்து வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பாகூரில் ரூர்பன் திட்டத்தில் ரூ.1.64 கோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையத்தை நேற்று திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
பாகூரில் பஸ் நிலையம் கட்ட 2013ம் ஆண்டு இடம் கையகப்படுத்தினாலும், பணிகள் தொடங்குவதால் காலதாமதமாகியது. இடையில் ஆட்சிக்கு வந்தவர்களாலும், கட்டி முடித்து திறக்க முடியவில்லை. தற்போது மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்து பஸ் நிலையத்தை கட்டி திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் நிதி அதிகரிக்கப்படுகிறது. இந்தாண்டு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், ஏதேனும் ஒரு பணி நடந்ததா என்றால் இல்லை. இப்போது, நமது ஆட்சியில் எல்லா பணிகளும் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் 10 லட்சம் ரூபாய் கூட, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ஒதுக்க முடியாமல் இருந்தது.
இப்போது, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கூடுதலாக 200 கோடி ரூபாய் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு அறிவித்த திட்டங்கள் எதையும் குறையில்லாமல் நிறைவேற்றி வருகிறோம். 450 கோடி ரூபாய் நிதி பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மற்றும் கல்விக்காக செலவிடப்பட்டு வருகிறது.
ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் ஊதியம் வாங்கி வந்த தினக்கூலி ஊழியர்களுக்கு, எங்கள் அரசு பொறுப்பற்ற பிறகு 18 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 5 ரூபாய் கூட உயர்த்த முடியாத உதவித்தொகை, இப்போது எவ்வளவு உயர்த்தி கொடுத்துள்ளோம் என்பதை நீங்கள் பார்க்கலாம். குடும்பத் தலைவிக்கான மாதாந்திர உதவித்தொகை சிவப்பு அட்டைகள் மட்டுமின்றி மஞ்சள் அட்டைக்கும் வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்றோம். தற்போது வழங்கி வருகிறோம். அதுவும் நல்ல தரமான சாப்பாட்டிற்கு பயன்படும் அளவிற்கு வழங்கி வருகிறோம். இந்த அரிசியுட்ன 2 கிலோ கோதுமை சேர்த்து வழங்கப்படும் என்றோம். அது, வரும் மாதத்தில் இருந்து அரிசியுடன் 2 கிலோ கோதுமை சேர்த்து வழங்கப்படும்.
நமது அரசு மக்களுக்காக அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. உங்களுடைய அரசானது, புதுச்சேரியின் வளர்ச்சி மீது அக்கறைகொண்டது. இந்த அரசு புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து திட்டங்களும், அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதில் ஒன்றாக பாகூரில் இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.