ADDED : செப் 27, 2026 05:42 PM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் சாலை, அரியாங்குப்பம் டேல்கேட் பகுதியில், மாணவர்களை குறித்து வைத்து கஞ்சா விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில், குற்றப்பிரிவு உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, வேல்முருகன் ஆகியோர் கொண்டு குழு, நேற்று முன்தினம் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
சந்தேகமான முறையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா வைத்து விற்றது தெரியவந்தது. அவர்கள், அரியாங்குப்பம் புதுகுளம் புகழேந்தி, 29; தட்டாஞ்சாவடி சுரேஷ்குமார், 22; என்பது தெரியவந்தது.
5 ஆயிரம் ரூபாய் மதிப்பு 30 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
