/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடைகளை உடைத்து திருடிய 3 பேர் கைது
/
கடைகளை உடைத்து திருடிய 3 பேர் கைது
ADDED : ஜன 10, 2025 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானம் மற்றும் மொபைல் போன் கடைகளை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சின்ன சுப்ராய பிள்ளை வீதியில் கடந்த 7ம் தேதி இரவு ஒரு தனியார் மதுக் கடையை உடைத்து கல்லாவில் இருந்த 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடினர். இது குறித்து ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில், ஒதியன்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பக்தவச்சலம் மற்றும் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடினர்.
கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதில் திருச்சி இ.பி.சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சச்சின் (எ) சஞ்சய், 24, என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மதுபானம், மொபைல் போன் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சஞ்சையிடம் இருந்த 57,870 ரொக்கம் மற்றும் 52,400 மதிப்புள்ள மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது தமிழகத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.