ADDED : ஜூன் 12, 2025 05:06 AM
திருக்கனுார் : விநாயம்பட்டு ஆற்றில் இருந்து மணல் திருடி பதுக்கிய 3 பேரை கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு, சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, விநாயம்பட்டில் உள்ள காலி மனைப்பிரிவு அருகே ஆற்று மணல் குவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சங்கராபரணி ஆற்றில் இருந்து மணலை திருடியதாக விநாயகம்பட்டு, அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த அண்ணாமலை, 57, பெரியபாபு சமுத்திரம், ஆலஞ்சலை தெரு செல்வம், 40; மணிகண்டன், 32; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர். மணல் திருட்டிற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.