ADDED : ஏப் 05, 2025 04:11 AM
புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில் 80 கிராம் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, வைத்திக்குப்பம் பகுதியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் வைத்திக்குப்பம், பச்சைவழியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்தி நாராயணன், 22; ஏழுமலை மகன் முகிலன், 20; வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் தீபக், 19; என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

