UPDATED : ஜூன் 18, 2026 06:35 AM
ADDED : ஜூன் 18, 2026 03:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் நேற்று பதவியேற் றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. முதல்வராக ரங்கசாமியும், அமைச்சர்களாக பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடிகிருஷ்ணாராவ் கடந்த மே 13ம் தேதி பதவியேற்றனர். தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், கடந்த மே 20ம் தேதி எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மீதமுள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் பங்கீடு செய்வதில், பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., இடையே போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 3ம் தேதி முதல்வர் ரங்கசாமி, அமைச்சரவை விரிவாக்கத்திற்கு என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து, பா.ஜ.,வை சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்தார். இந்த கோப்பிற்கு கடந்த 8 ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தது.
அதையடுத்து, 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று காலை பழைய மக்கள் மாளிகையில் நடந்தது. காலை 9:10 மணிக்கு கவர்னர் கைலாஷ்நாதன் விழா மேடைக்கு வருகை தந்தார். ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் ராஜசேகர் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் ஆணையை தலைமை செயலர் சரத்சவுகான் வாசித்தார். தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன், ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் ராஜசேகர் மூவருக்கும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் மூவரும், கடவுளின் பெயரில் பதவி பிரமாணம் ஏற்றனர். அமைச்சர்களாக பதவியேற்ற மூவருக்கும் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர்களுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
