ADDED : மார் 21, 2026 04:19 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் 200 கிராம் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த சட்ட கல்லுாரி மாணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, பழைய சாராய ஆலை குடியிருப்பு அருகே இளைஞர்கள், மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் சட்டக் கல்லுாரி மாணவரான வெற்றிவேல், 22; குருசுக்குப்பத்தை சேர்ந்த ராஜா மகன் சந்தோஷ், 20; மணி மகன் அஜய் கிருஷ்ணராஜ், 21, ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
