/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 34 வகையான மருந்துகள் விற்க... தடை! மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை
/
புதுச்சேரியில் 34 வகையான மருந்துகள் விற்க... தடை! மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை
புதுச்சேரியில் 34 வகையான மருந்துகள் விற்க... தடை! மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை
புதுச்சேரியில் 34 வகையான மருந்துகள் விற்க... தடை! மருந்து கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை
ADDED : டிச 31, 2025 04:56 AM

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தை தொடர்ந்து 34 வகையான மருந்துகளை மறு உத்தரவு வரும் வரை விற்க தடை விதித்து161 மருந்து கடைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆக்ராவில் நடத்திய சோதனையில் போலி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் இணைந்து தொழிற்சாலை உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடத்தி, ரூ. 200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ரெட்டியார்பாளையத்தில் வசிக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன், பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் அதிகம் விற்பனையாகும் மற்றும் விலை அதிகமுள்ள 34 வகையான மருந்துகளை போலியாக தயாரித்து நாடு முழுதும் விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதன்பேரில், ராஜா (எ) வள்ளியப்பன், அவரது பங்குதாரர் அரியாங்குப்பம் மணிகண்டன், விமல், ஜி.எஸ்.டி., மோசடிக்கு உதவிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த போலி மருந்து விவகாரம், தற்போது சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
போலி மருந்து விவகாரத்தை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் குழுவினர் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 1,200 மருந்தகங்களில், உள்ள மருந்துகள், அதன் பேட்ஜ் மற்றும் காலாவதி விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், இதுவரை நடத்திய சோதனையில் 161 கடைகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையில் சிக்கிய 34 வகையான போலி மருந்துகள் விற்பனை செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மருந்துகளின் மாதிரிகள் மற்றும், குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் மாதிரிகள். அதே மருந்தை பிரபல நிறுவனம் தயாரித்த மருந்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிகாரிகள் மெத்தனம் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. இத்துறையினர் மருந்து உற்பத்தி கூடங்களில் ஒவ்வொரு பேட்ஜ் மருந்துகளையும் தர ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்னரே கம்பெனியை விட்டு மருந்துகளை வெளியே அனுப்ப வேண்டும்.
அதேபோன்று, மருந்தகங்களில் அனுமதி பெற்ற மருந்துகள் விற்கப்படுகிறதா? போலி மருந்துகள் மற்றும் காலாவதி மருந்துகள் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக மூன்றாண்டிற்கு முன் 15 பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வாளர் பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் முறையாக மருந்தகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிலையங்களில் சோதனை நடத்தியிருந்தால், இந்த போலி மருந்து விவகாரம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.
மேலும், சி .பி.சி.ஐ.டி., போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 34 வகையான மருந்துகளை மறு உத்தரவு வரும் வரை விற்பனைக்கு தடை விதித்து மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, புதுச்சேரியில் உள்ள 150 மற்றும் காரைக்காலில் 11 மருந்தகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பிற மருந்தகங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

