சென்டாக் எம்.டி.எஸ். படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு அறிவிப்பு
சென்டாக் எம்.டி.எஸ். படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு அறிவிப்பு
ADDED : அக் 18, 2026 10:30 PM
புதுச்சேரி: சென்டாக் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு மற்றும் பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படிப்பில் அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, பதிவு கட்டணம் செலுத்துதல் மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம் நாளை 20ம் மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
2ம் சுற்றில் அளிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள் செல்லாது என்பதால், 3-ம் சுற்றில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் புதிய விருப்பத்தேர்வுகளை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
1 மற்றும் 2ம் சுற்றுகளில் இடம் பெற்று, தற்போது கல்லூரியில் இருந்து விலக விரும்பும் மாணவர்கள் நாளை 20ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது லாகின் முகப்பு மூலமாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு மாணவர்களுக்கு ராஜினாமா செய்ய அனுமதி அளிக்கப்படாது. 3-ம் சுற்றில் இட ஒதுக்கீடு பெற்று சேராத மாணவர்களின் கட்டணம் திருப்பி தரப்படாது. அவர்கள் அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வுகளில் பங்கேற்க தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
பதிவுக் கட்டண விவரங்களைப் பொறுத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு பொது, இ.டபுள்யூ.எஸ்., ஓ.பி.சி., எம்.பி.சி., முஸ்லீம், பி.டி., மீனவர், எஸ்சி, எஸ்டி., பிரிவினருக்கு ரூ.1,00,000- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீடு, தெலுங்கு சிறுபான்மை மற்றும் என்.ஆர்.ஐ ஒதுக்கீடுகளுக்கு ரூ.2,00,000- செலுத்த வேண்டும். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இரண்டிற்கும் விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் ரூ.2,00,000 செலுத்தினால் போதுமானது.
ஏற்கனவே 1 அல்லது 2- ம் சுற்றுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தாமல் 3-ம் சுற்றில் பங்கேற்கலாம். இருப்பினும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த புதுச்சேரி மீனவர், எஸ்சி., எஸ்டி மாணவர்கள் 3-ம் சுற்றுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 2-ம் சுற்றில் கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காதவர்கள் மீதமுள்ள கட்டணத்தையும், இடம் கிடைத்தும் சேராதவர்கள் முழுப் பதிவு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். பதிவு கட்டணம் செலுத்த மற்றும் விருப்பத்தேர்வு சமர்ப்பிக்க நாளை 20ம் மாலை 5 மணி கால அவகாசம் உண்டு.
கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது ஹெல்ப்லைன் எண்களைத் 0413-2655570, 2655571 தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
