கப்பல் ஊழியர் வீட்டில் 45 சவரன் கொள்ளை புதுச்சேரியில் துணிகரம்
கப்பல் ஊழியர் வீட்டில் 45 சவரன் கொள்ளை புதுச்சேரியில் துணிகரம்
ADDED : ஆக 12, 2026 01:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், கப்பல் ஊழியர் வீட்டில் 45 சவரன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர், மும்பையில் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தவதி, 31. இவர் நல்லவாடு குட்டியாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நடந்த பாட்டு கச்சேரியை பார்க்க குடும்பத்தோடு வீட்டை பூட்டி கொண்டு சென்றார்.
நள்ளிரவு 12:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 45 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலின்பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் விசாரணையில், முகுந்தவதி வீட்டை பூட்டும் போது, அங்குள்ள ஒரு இடத்தில் சாவியை வைப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி அவர் பிரோவை பூட்டி அதன் சாவியையும் அங்கேயே வைத்துள்ளார். இதையெல்லாம் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பூட்டை உடைக்காமல் திருடியிருக்கலாம் என, தெரியவந்துள்ளது.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
